அரசியல் பிரவேசம் பற்றி வித்யா ராணி வீரப்பன் பேட்டி


வித்யாராணி வீரப்பன்… தமிழக பாரதிய ஜனதாக் கட்சியின் இளைஞரணி மாநில துணைத் தலைவராக கடந்த 15-ம் தேதி நியமனம் பெற்றிருக்கிறார் இவர்! சந்தனக் கடத்தல் மன்னன் என இந்தியா முழுவதும் பேசப்பட்ட மறைந்த வீரப்பன் மகள் இவர்! இவரது நியமனம் அரசியல் வட்டாரத்தில் அதிக கவனம் பெற்றிருக்கிறது.

2004-ல் அதிரடிப் படையினரால் என்கவுன்டர் செய்யப்பட்ட வீரப்பனுக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும், பிரபாதேவி, வித்யாராணி என்கிற மகள்களும் உண்டு. இவர்களில் முத்துலட்சுமி, தி.வேல்முருகன் தலைமையிலான தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் மகளிரணி பொறுப்பாளராக இருக்கிறார். திவிரமாக பாஜக.வை எதிர்க்கும் கட்சி அது என்பது குறிப்பிடத்தக்கது.

காதல் திருமணம், அதனால் எழும் வழக்கமான மனஸ்தாபங்கள் ஆகியவற்றைக் கடந்து தற்போது கிருஷ்ணகிரியில் தனது கணவர் குடும்பத்தினருடன் வசிக்கிறார் வித்யாராணி, வழக்கறிஞரான இவர், அங்கு சிறுவர் பள்ளி ஒன்றையும் நடத்துகிறார். தனது அரசியல் பிரவேசம் பற்றி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழுக்கு பேசினார் வித்யாராணி.

வித்யாராணி வீரப்பன், பாஜக இளைஞரணி தமிழ்நாடு துணைத் தலைவர்

இனி அவரது குரலில்…

‘அப்பா (வீரப்பன்) பற்றி வெளியே வேற மாதிரி பலர் பேசியிருக்கலாம். ஆனா அவர் வாழ்ந்த பகுதி மக்கள், அவரோட சர்வீஸைப் பற்றி எங்கிட்ட பேசியிருக்காங்க. ‘மலைப் பகுதியில் எங்களைப் பார்த்தாரு. நாங்க கஷ்டத்தில் இருந்தோம். அவரு கையில் இருந்ததை எங்ககிட்ட கொடுத்தாரு’ன்னு சொல்வாங்க. நீங்க அவரு பேரை காப்பாத்தணும்னு சொல்வாங்க. அதைக் கேட்டு கேட்டுத்தான் வளர்ந்தேன். அது எனக்கு இன்ஸ்பிரேஷனா இருந்தது.

எங்க அப்பாவுடன் தொடர்பில் இருந்ததாக சந்தேகத்தின் பேரில் பழிவாங்கப்பட்ட மக்களும் இருக்காங்க. பலர் வழக்குகளில் பாதிக்கப்பட்டிருக்காங்க. பலர் மனநிலை பாதிக்கப்பட்டிருக்காங்க. இதெல்லாம் எனக்கு பெரிய கடமை இருக்குன்னு உணர்த்திகிட்டே இருந்தது. இயல்பா சர்வீஸ் பண்ணனும்ங்கிற ஆசையும் இருந்ததால அரசியலுக்கு வந்தேன்’

ஆரம்ப காலத்தில் பாட்டாளி மக்கள் கட்சியுடன் தொடர்பில் இருந்தீர்களே!

‘பாமக.வில் இணையவில்லை. எங்க அப்பா இருந்தவரை, அவங்க கார்டியனா இருந்தாங்க. நாங்களும் அதே சமூகத்தைச் சேர்ந்தவங்க என்கிற அடிப்படையில் ஒரு ரிலேட்டிவ் கைன்ட் ஆஃப் அனுசரணை கிடைச்சது. நேரடியான அரசியலுக்கு இப்போதான் வந்திருக்கேன்’

பாரதிய ஜனதாவை தேர்வு செய்ய என்ன காரணம்?

‘பாண்டிச்சேரியை சேர்ந்த குடும்ப நண்பர் சாய் சுரேஷ், பாஜக மாநில செயற்குழுவில் இருக்கிறார். அவர்தான் என்னையும், அம்மாவையும் (முத்துலட்சுமியை) வந்து பார்த்தார். பொன் ராதாகிருஷ்ணன் ஐயாவும் கூப்பிட்டு, ‘பொதுப்பணிக்கு வரலாம்’னு பேசினார். அப்படித்தான் பி.ஜே.பி.க்கு வந்தேன்.

இன்னைக்கு வலுவான கட்சியாக இருந்து, வலுவான ஆட்சியை பாரதிய ஜனதா கொடுத்துகிட்டு இருக்கு. மக்களுக்கு எந்த சர்வீஸ் பண்ணனும்னாலும் அவங்க மூலமா பண்றதுதான் சரியா இருக்கும். தவிர, இங்க பார்ட்டிக்குள்ள எனக்கு ஒரு ரெஸ்பெக்ட் கிடைச்சது. அதுதான் பாஜக.வை தேர்வு செய்யக் காரணம்.’

வேறு எந்தக் கட்சியும் அணுகலையா?

‘எங்க அம்மா ஏற்கனவே அரசியல்ல இருக்காங்க. என்னை வேறு எந்தக் கட்சியும் அணுகலை. நானும் யாருகிட்டயும் கேட்கல.’

வீரப்பனை தமிழ்த் தேசியவாதியாக பலர் கொண்டாடினாங்க. நீங்க வேற ஐடியாலஜிக்குள் செல்கிறீர்களே?

‘ஐடியாலஜின்னு நான் பார்க்கலை. அவரோட ஆர்வம், நோக்கம் எல்லாம் மக்கள் சேவையில இருந்தது. தமிழர்கள் அடிபட்டாங்க, பாதிக்கப்பட்டாங்கன்னு குரல் கொடுத்தாரே தவிர, மற்றபடி எல்லோரையும் ஒரே மாதிரிதான் நினைத்தார். மக்கள் நல்லா இருக்கணும் என்பதுதான் அவரோட நோக்கம்.

அவரை நான் பார்த்தபோது, அவர் அதிகம் பேசியது உலக அரசியல்தான். அப்பவே அவரோட ‘தாட்’ எனக்குப் புரிஞ்சது. அவரு பேசுனது, செய்தது எல்லாவற்றையும் வச்சு இது கரெக்டான டிராக்கா இருக்கும்; நிறைய மக்களுக்கு நிறைய விஷயங்களை செய்ய முடியும்ங்கிற முடிவுக்கு வந்தேன்.’

இந்த அரசியல் மூலமா மக்களுக்கு என்ன நன்மை செய்ய முடியும்னு நினைக்கிறீங்க?

‘யூத் விங்ல எனக்கு பொறுப்பு கொடுத்திருக்காங்க. இதுல நிறைய யூத்ஸை மோடிவேட் பண்ணி, அவங்க நிலையை புரிய வச்சு, சரியான டிராக்கிற்கு கொண்டு வர முடியும். எப்படி கவர்மெண்ட் ஸ்கீம்ஸை யூஸ் பண்றது? ஒவ்வொருவரும் அவங்க ஃபியூச்சர்ல எப்படி ஷைன் பண்ணலாம்? சாதாரண மக்களுக்கு ஸ்கீம்ஸை எப்படி கொண்டு சேர்க்கலாம்? என்பது தொடர்பாக பணியாற்ற முடியும். இதுக்கு மேல கட்சியில எனக்கு என்ன பணி கொடுக்கிறாங்க என்பதைப் பொறுத்து, செயலாற்றுவேன்’

மலைவாழ் மக்கள், பழங்குடியினருக்கான பணி ஏதாவது?

‘கண்டிப்பா அவங்களுக்கு நான் ரொம்ப கடமைப்பட்டிருக்கேன். அப்பாவைப் பார்க்காத பலரும்கூட குடும்பத்தை தொலைச்சுட்டு நிக்கிறாங்க. அதை மனசுல வச்சிருக்கேன். எனக்கு வாய்ப்புகள் கிடைக்கும்போது, அவங்களுக்கு முடிஞ்சதை நிச்சயம் செய்வேன்’

அதிமுக, திமுக.வை அணுகாதது ஏன்?

‘அவங்களும் அணுகலை. நானும் அணுகலை. இந்த இடத்துல தெரிஞ்சவங்க இருந்ததால, ஒரு பாதுகாப்பு உணர்வு இருந்தது. ஃபேமிலிக்கு தெரிஞ்சவங்க அணுகினாங்க. பொன் ராதாகிருஷ்ணன் ஐயா நம்பிக்கையான வார்த்தைகள் சொன்னதால, சோசியல் ஸ்ட்ரீமுக்குள்ள தைரியமா இறங்கினேன்’

வீரப்பன் மகள் என்கிற முத்திரை சில இடங்களில் சங்கடத்தையும் உருவாக்குமே?

‘நான் அதை பொருட்படுத்திக்கவே மாட்டேன். அவர் (வீரப்பன்) சூழ்நிலைக் கைதி. எனது வளர்ப்பு முறை, செயல்பாடுகள் வேற. எனவே அது பிரச்னை இல்லை.’

உங்க அம்மா (முத்துலட்சுமி) தீவிரமான தமிழ்த் தேசிய அரசியலில், அதுவும் பாஜக.வை எதிர்க்கும் கட்சியில் இருப்பது குடும்பத்தில் நெருடலை உருவாக்காதா?

‘அப்படியெல்லாம் இல்லை. அவங்க (முத்துலட்சுமி) அரசியலை ஃபேமிலிக்குள்ள எடுத்துட்டு வர்றதில்லை. அவங்க இண்ட்ரஸ்ட்ல அவங்க வொர்க் பண்றாங்க. அதுல நான் தலையிடுறது இல்லை. அதுமாதிரி என்னுடைய வொர்க்ல அவங்க தலையிட மாட்டாங்க.’ என்கிறார் வித்யாராணி விரப்பன்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

 

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at NavaIndia Tamil. You can also catch all the Tamilnadu News in Tamil by following us on Twitter and Facebook

www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: