சீனு ராமசாமிக்கு என்ன ஆச்சு? பதறவைத்த ட்வீட்

சீனு ராமசாமிக்கு என்ன ஆச்சு? பதறவைத்த ட்வீட்


இயக்குனர் சீனு ராமசாமி, “என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன். முதல்வர் அய்யா உதவ வேண்டும்… அவசரம்.” என்று ட்வீட் செய்த சில நிமிடங்களிலேயே பத்திரிகையாளர்களைச் சந்தித்து 800 பட விவகாரத்தில் எனக்கு போன் செய்து ஆபசமாக பேசி மிரட்டல் விடுக்கிறார்கள் என்று கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இயக்குனர் சீனு ராமசாமி, இன்று காலை தனது ட்விட்டர் பக்கத்தில், “என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன். முதல்வர் அய்யா உதவ வேண்டும்… அவசரம்.” பரபரப்பு ஏற்பட்டது.

இப்படி ட்வீட் செய்த சிறிது நேரத்திலேயே இயக்குனர் சீனு ராமசாமி சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேச அழைத்திருந்தார். சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசிய இயக்குனர் சீனு ராமசாமி,  “எனக்கு சினிமா தெரிந்த அளவுக்கு, சினிமா அரசியல் தெரியவில்லை. இதுதான் உண்மை. சமீபத்தில் முத்தையா முரளிதரன் பயோபிக் 800 திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என்று எதிர்ப்புகள் வந்த சூழலில் நான் ரொம்ப வேதனைப்பட்டேன். அப்போது, விஜய் சேதுபதியிடம் தனிப்பட்ட முறையில் என் கருத்தை எடுத்துச் சொன்னேன். பொதுவெளியிலும் எடுத்துச் சொன்னேன். ஒருபகுதி தமிழர்களுடைய எதிர்ப்பைச் சம்பாதிக்கக் கூடாது. விஜய் சேதுபதி நலன் கருதியும் ட்விட்டரில் கருத்து தெரிவித்தேன். இதையடுத்து, என்னை விஜய் சேதுபதிக்கு எதிராக இருப்பதாக சித்தரிக்கின்றனர்.

விஜய் சேதுபதி ட்விட்டரில் ‘நன்றி வணக்கம்’ என்று பதிவிட்டவுடன் அவருக்குத் போன்செய்து, நன்றி வணக்கம் என்றால் என்ன இதற்கு என்ன பொருள் என்று கேட்டேன். அதற்கு அவர், “சார், அந்தக் கதை எனக்கு ரொம்பப் பிடித்திருந்ததால் நடிக்கச் சம்மதித்தேன். நல்ல கதாபாத்திரம், உலகம் முழுக்க ரீச் ஆவோம் என்றுதான் ஒப்புக் கொண்டேன். அதற்குப் பிறகுதான் தமிழர்களைப் புண்படுத்துவது மாதிரி இருக்கிறது எனத் தெரிந்துகொண்டேன். இந்தச் சூழலில் என்ன செய்யலாம் என நினைக்கும்போது, தயாரிப்பு நிறுவனமே புரிந்துகொண்டு விலகிப் போனார்கள். ஆகையால், அவர்களுக்கு நன்றி வணக்கம் என்று சொன்னேன்” என்று விஜய் சேதுபதி கூறினார்.

அதோடு அந்தப் பிரச்சினை முடிந்துவிட்டது. அதற்குப் பிறகும் கூட விஜய் சேதுபதியை நேரடியாக சந்தித்துப் பேசிவிட்டேன். விஜயதசமி அன்று விஜய் சேதுபதியின் அலுவலகப் பூஜைக்குக் கூட போய்விட்டு வந்தேன். ஒட்டுமொத்த உலகத் தமிழர்களும் விஜய் சேதுபதி மீது வைத்திருக்கும் அன்பை இங்குதான் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆனால், நான் ஏதோ விஜய் சேதுபதிக்கு எதிராக இருப்பதாக நள்ளிரவில் வாட்ஸ்-அப்பில் அழைப்புகள் வந்து கொண்டே இருக்கிறது. தொடர்ச்சியாக மெசேஜ்கள் அனுப்புகிறார்கள். எனக்கு எதற்கு இதைச் செய்கிறார்கள் எனத் தெரியவே இல்லை. நானும் என் குடும்பமும் மகிழ்ச்சியாக இருக்கும் இந்தச் சமயத்தில் தொடர்ந்து அச்சுறுத்தல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. ஆகையால், மனப் பதற்றத்தில் உள்ளேன். இதை உடனே தெரியப்படுத்த வேண்டும் என ஆசைப்பட்டேன்” என்று சீனு ராமசாமி கூறினார்.

இதையடுத்து பத்திரிகியாளர்கள் சீனு ராமசாமியிடம் உங்களை யார் என்ன அச்சுறுத்துகிறார்கள்? என்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த இயக்குனர் சீனு ராமசாமி, “எனக்கு போன் செய்து ஆபாச வார்த்தைகளில் பேசுகிறார்கள். அதெல்லாம், அந்த வார்த்தைகளை வெளியில் சொல்ல முடியாது. நானும் நன்றி வணக்கம் என ட்வீட் போட்டவுடன். அதற்குக் கீழே கடும் எதிர்வினைகள் இருந்தன. உடனே அந்த ட்வீட்டை நீக்கிவிட்டேன். உண்மையில் விஜய் சேதுபதி மீது உலகத் தமிழர்கள், தமிழ்ப் படைப்பாளிகள் என அனைவருமே கோரிக்கை வைத்தார்கள். யாருமே விஜய் சேதுபதியைத் திட்டவே இல்லை. அதே போல் நானும் கோரிக்கைதான் வைத்தேன். இது தவறா? எனக்கும் விஜய் சேதுபதிக்கும் எதிர்ப்புணர்ச்சியை உண்டாக்கி, அதில் சிலர் குளிர் காய வேண்டும் என நினைக்கிறார்கள்.” என்று கூறினார்.

அப்படி விஜய் சேதுபதிக்கும் உங்களுக்கு இடையே யார் பிரச்னையை உருவாக்குகிறார்கள் என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு சீனு ராமசாமி, “அது யார் என்று எனக்குத் தெரியவில்லை. அதை கண்டுபிடிக்கத்தான் உங்களிடம் சொல்கிறேன்.” என்று கூறினார்.

காவல்துறையிடம் புகார் அளிக்கவில்லையா என்று செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த சீனு ராமசாமி, “காவல்துறையினரிடம் புகார் கொடுக்கப் போகிறேன். எனக்கு அவர்கள் எப்படி ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்தார்கள். என்ன பேசினார்கள் என்பதை சொல்ல முடியவில்லை. ஏனென்றால், நான் மேடைப் பேச்சாளன் இல்லை. அதை எனது புகாரில் விரிவாக தெரிவிப்பேன்.” என்று கூறினார்.

தங்களுக்கு இது போன்ற மிரட்டல்கள் எத்தனை நாட்களாக தொடர்கிறது? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு “4 – 5 நாட்களாக நடக்கிறது.” தொடர்கிறது என்று கூறினார்.

உங்களுக்கு போன் செய்துபேசுபவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று சொல்ல முடியுமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, சீனு ராமசாமி, “காவல்துறையில் என்ன பேசினார்கள் என்பதை எழுதியே கொடுக்கப் போகிறேன். முகம் தெரியாத சில சக்திகள் என்ன நோக்கத்திற்காக எச்சரிக்கை செய்கிறார்கள் என்று தெரியவில்லை. அப்படித் தெரிந்தால் கூட அவர்களிடம் பேச நான் தயாராக இல்லை. எந்தவொரு அரசியல் அமைப்பைச் சேர்ந்தவர்களும் என்னைத் தொடர்பு கொள்ளவில்லை. தமிழ் ஈழ ஆதரவாளர்கள் எனக்கு நன்றிதான் சொல்கிறார்கள். விஜய் சேதுபதிக்கும் உங்களுக்குமான இணக்கம் அனைவருக்கும் தெரியும். அப்படியிருந்தும் தைரியமாக உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டீர்கள். நாங்கள் பாராட்டுகிறோம் என்றுதான் கூறினார்கள்.

உங்களுக்கு மிரட்டல் விடுப்பது விஜய் சேதுபதி ரசிகர்கள் என நினைக்கிறீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த சீனு ராமசாமி, “விஜய் சேதுபதி ரசிகர்கள் என்னைக் கண்டிப்பாக மிரட்ட மாட்டார்கள். அவர்கள் என்னுடைய தம்பிகள். மிரட்டல் விடுப்பவர்கள் யாரென்று தெரியவில்லை. எதற்காகப் பண்ணுகிறார்கள் என்றும் தெரியவில்லை. பின்னணி என்னவென்றும் தெரியவில்லை.” என்று கூறினார்.

உங்களுக்கு மிரட்டல் விடுப்பவர்கள் பற்றி விஜய் சேதுபதியிடம் பேசினீர்களா? அவர் என்ன சொன்னார்? என்று பத்திரிகையாளர்கள் இயக்குனர் சீனு ராமசாமியிடம் கேட்டனர். இதற்கு சீனு ராமசாமி, “விஜய் சேதுபதி அதற்கு என்னிடம் நீங்கள் அதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். இது எல்லாம் இயல்பானவைதான் விட்டுவிடுங்கள். நம் இருவருக்குள் யார் வந்து முரண்பாட்டை உண்டாக்க முடியும் என்று கூறினார். ஆனால், நான், இங்குதான் எனது வீடு இருக்கிறது. எனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் எனது வீட்டுக்கு தேவையான பொருட்கள், காய்கறிகள் வாங்க, டீ குடிக்க என்று வெளியே செல்வேன். இப்போது தனியாக வெளியே செல்ல அச்சமாக உள்ளது. அதனால், மன உளைச்சலில் இருக்கிறேன். ஆகையால், இந்த பிரச்னையை முறையாகப் பதிவு செய்ய வேண்டும் என நினைத்தேன். நான் இந்த கொரோனா காலத்தில் காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்து பாடல்களை எல்லாம் எழுதியுள்ளேன். நான் ஒரு முருக பக்தன். இது பற்றி நான் முதல்வரிடம் தெரிவிக்க விரும்புகிறேன். எனக்கு இந்த மாதிரி தொந்தரவுகள் வராமல் முதல்வர் ஐயா பார்த்துக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். முதல்வரை சந்திக்க அனுமதி கொடுத்தால் நிச்சயமாக நேரில் சந்திப்பேன். இன்னும் அனுமதி கேட்கவில்லை. எப்படித் தொடர்புகொள்வது எனத் தெரியவில்லை.” என்று கூறினார்.

உங்களுக்கு மிரட்டல் விடுப்பவர்கள் விஜய் சேதுபதி ரசிகர்கள் இல்லை என்கிறீர்கள்? பேசும்போது தெரிந்திருக்க வேண்டுமே? யாருடைய பின்புலம்? என்று பத்திரிகையாளர்கள் இயக்குனர் சீனு ராமசாமியிடம் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த இயக்குனர் சீனு ராமசாமி, “என்னை ஆபாசமாகத் திட்டுகிறார்கள். நான் இதுவரை 7 படங்கள் இயக்கியுள்ளேன். 48 வயதாகிறது. நீ ஏன் இதை செய்தாய் எனத் திட்டுகிறார்கள். விஜய் சேதுபதியை ஏன் நடிக்கக் கூடாது எனச் சொன்னாய், உன்னைப் பற்றி எங்களுக்குத் தெரியாதா. நீ பட வாய்ப்புக்காக தானே இதெல்லாம் செய்கிறாய் என்று கூறுகிறார்கள்.” என்று தனக்கு ஆபாசமாகப் பேசி, கொலை மிரட்டல் விடுப்பவர்கள் பற்றி இயக்குனர் சீனு ராமசாமி பத்திரிகையாளர்களிடம் கூறினார்.

இயக்குனர் சீனு ராமசாமி பத்திரிகையாளர்களை சந்தித்து கூறிய செய்தி ஊடகங்களில் வெளியான நிலையில், அமைச்சர் கடம்பூர் ராஜு, இது குறித்து இயக்குனர் சீனுராமசாமி புகார் அளித்தால் முறையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at NavaIndia Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center

GET THE BEST EXPORT DEALS IN YOUR INBOX

Don't worry we don't spam

NavaIndia.com
Reset Password
Compare items
  • Total (0)
Compare
0
WhatsApp chat
%d bloggers like this: