
ARUN JANARDHANAN
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க. அழகிரி அரசியல் கட்சியைத் தொடங்கி பாஜக தலைமையிலான கூட்டணியில் சேர பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, மு.க.அழகிரியுடனான கூட்டணியில் மாநிலத்தில் ஒரு பரந்த அரசியல் முன்னணிக்கு வடிவம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கூட்டணி பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மாநில பாஜக பிரிவு மற்றும் மு.க. அழகிரி முகாமில் உள்ள நம்பகமான வட்டாரங்கள் உறுதிப்படுத்தினார்கள். தேசியக் கட்சியான பாஜகவின் திட்டங்களின்படி எல்லாம் நடந்தால், மு.க. அழகிரி நவம்பர் 21ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்திப்பார்.
அமித்ஷா மற்றும் அழகிரி இடையேயான சந்திப்பு நவம்பர் 21ம் தேதி சென்னையில் நடக்க வாய்ப்புள்ளது என்று பாஜக மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார். “இந்த சந்திப்பு இருவர் மட்டுமே சந்திக்கும் வகையில் இருக்கக்கூடும்” என்று பாஜக மூத்த தலைவர் கூறினார்.
தமிழக பாஜக தலைவர் எல் முருகனை தொடர்பு கொண்டு கேட்டபோது, இந்த பேச்சுவார்த்தை பற்றி தனக்கு தெரியாது என்று கூறினார். அவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் அதை (அழகிரியின் அரசியல் கட்சி என்.டி.ஏ கூட்டணியில் சேருகிறது) விசாரித்து இறுதி கட்டத்தில் உறுதிப்படுத்துவதாகக் கூறினார்.
இது குறித்து கருத்து கேட்க மு.க.அழகிரியை தொடர்புகொள்ள முயன்றபோது, அவரை தொடர்புகொள்ள முடியவில்லை என்றாலும், அவருக்கு நெருக்கமான வட்டாரம், பாஜக அவருடன் சிறிது தொடர்பில் உள்ளது என்றார். “பேச்சுவார்த்தை நீண்ட காலமாக நடந்து வருகிறது. கட்சியிலும் குடும்பத்திலும் தனது மூத்த சகோதரரை ஓரங்கட்டிய திமுக தலைவரும் முக.அழகிரியின் தம்பியுமான மு.க.ஸ்டாலினுக்கு இது ஒரு வலுவான பதிலடியாக இருக்கும். அழகிரியைப் பொறுத்தவரை, இது ஒரு வாய்ப்பு… கடைசி வாய்ப்பாகவும் இருக்கலாம். சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் அவரது வேலை மேலும் சிக்கல்களை சந்திக்க நேரிடும்” என்றார்.
அழகிரி தொடங்கும் புதிய அரசியல் கட்சி ‘கலைஞர் திமுக’ அல்லது ‘க.தி.மு.க’ என்ற பெயரில் அமையலாம் என்று வட்டாரங்கள் கூறுகின்றனர். அழகிரியின் மகன் தயாநிதியும் புதிய கட்சியை ஆதரிக்கக்கூடும் என்று கூறுகின்றனர். திமுக இளைஞர் அணிக்கு தலைமை தாங்கும் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதியைப் போலவே, தயாநிதியும் க.தி.மு.க-வில் அதே போன்ற பதவியை ஏற்பார் என்று ஒரு வட்டாரம் தெரிவித்தது.
“அமித்ஷாவின் சென்னை வருகையில் எந்த மாற்றமும் இல்லை என்றால், அழகிரியின் புதிய கட்சி சுமார் 100-200 நெருங்கிய ஆதரவாளர்கள் முன்னிலையில் அறிவிக்கும் யோசனை உள்ளது. அழகிரி அடுத்த நாள் அமித்ஷாவைச் சந்திக்கக்கூடும்” என்று அழகிரியின் தற்போதைய திட்டங்களைத் தெரிந்த வட்டாரம் தெரிவித்தனர்.
பல சுற்று வெற்றிகரமான பேச்சுவார்த்தைகளை மேற்கோள் காட்டி இந்த திட்டம் எந்த பிரச்சனையையும் சந்திக்க வாய்ப்பில்லை என்று இரு தரப்பு வட்டாரங்களும் கூறியிருந்தாலும், மூத்த திமுக தலைவர் ஒருவர் ஸ்டாலின் இந்த நடவடிக்கைகள் குறித்து அறிந்திருப்பதாக சுட்டிக்காட்டினார்.
இது குறித்து திமுக தலைவர் ஒருவர் கூறுகையில், “அவர் பாஜகவுக்கு செல்லட்டும். அழகிரி 6 ஆண்டுகளாக அரசியலில் எங்குமே இல்லை. அவருக்கு எந்தத் தொகுதியும் இல்லை. அவருக்கு ஆதரவாளர்களும் இல்லை, பணமும் இல்லை. ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு தலைப்பு செய்திகளைத் தவிர இது தமிழக அரசியலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது” என்று அவர் கூறினார்.
அழகிரி தனது தந்தை கருணாநிதி இறந்த 30 நாட்களுக்குப் பிறகு, சென்னையில் ஒரு பேரணியை நடத்தியபோது செப்டம்பர் 2018-இல் அழகிரி ஊடகங்களில் தோன்றினார். மு.க.அழகிரி கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக 2014 ல் திமுக-விலிருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at NavaIndia Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
www.navaindia.com
Merchant Export Marketplace
Best Export Training center